×

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மேல்முறையீடு: டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஜாமீன் கேட்டு மணீஷ் சிசோடியா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதனை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மற்றும் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திகார் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் கடந்த மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘டெல்லியில் மக்களவை தேர்தல் மே 25ம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி தரப்பில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் வேலைகளை பார்க்கும் விதமாக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த முடித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா, ‘டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. அதனால் தற்போதைய சூழலில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்காலஜாமீன் உட்பட எந்தவித நிவாரணங்களும் வழங்க முடியாது.

இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்று கொள்கிறது. அதனை அடிப்படையாக கொண்டு மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை நிராகரித்து ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கடந்த 30ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதேநேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவானது நாளை விசாரணைக்கு வர உள்ளது.

கவிதா வழக்கில் 6ல் உத்தரவு
டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் எம்எல்சி கவிதா, மக்களவை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக இருந்த நிலையில், வரும் 6ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவஜா அறிவித்தார்.

The post மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மேல்முறையீடு: டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi High Court ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு...